உயிரை பணையம் வைத்து சம்பாதித்த நகை பணத்தை தயவுசெய்து மீட்டுத் தாருங்கள் என ராணுவ வீரர்கள் கண்ணீர் மல்க காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மெலட்டூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் கபாலீஸ்வரன், பிரகதீஸ்வரன். இவர்கள் இருவரும் சண்டிகர் மற்றும் அசாம் மாநிலத்தில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் சகோதரியின் வீட்டு விசேஷத்திற்காக விடுப்பில் இருவரும் சொந்த கிராமத்திற்கு வந்திருந்தனர்.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கோவில்கள் அனைத்தும் பூட்டப்பட்டன இதனால் குலதெய்வ கோவிலில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. சகோதரர்கள் இருவரும் ஊரடங்கு முடிந்தவுடன் வீட்டு நிகழ்ச்சியை முடித்துவிட்டு பணிக்கு திரும்பலாம் என்று ஊரிலேயே தங்கி விட்டனர்.
இந்நிலையில் குடும்பத்தோடு அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் கபாலீஸ்வரன் வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டின் படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது, அதில் இருந்த 40 பவுன் தங்க நகைகள் 200 கிராம் வெள்ளி பொருட்கள் 90 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவை திருடு போனது தெரியவந்தது.
இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற குடும்பத்தினர் மெலட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து ராணுவ வீரர் கபாலீஸ்வரன் கூறுகையில், நானும் எனது சகோதரரும் உயிரை பணயம் வைத்து பணியாற்றினோம் சிறுக சிறுக சேமித்து வாங்கிய நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது மிகவும் மன வேதனை அளிப்பதாக தெரிவித்தார். கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.