கொரோனா தடுப்பூசி குளறுபடிகளைச் சரி செய்ய மத்திய, மாநில
அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம். மக்களுக்கு வீடு தேடிச் சென்று தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் வலியுறுத்தியுள்ளார்
கொரோனா பெருந்தொற்று நோயின் இரண்டாவது அலை
தீவிரமாக இருக்கும் நிலையில், அதற்கான தடுப்பூசி அனைவருக்கும்
கிடைப்பதில் இருக்கும் சிரமங்களைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை
மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் எனக்
கேட்டுக்கொள்கிறேன்.
தடுப்பூசிக்கான முன்பதிவினை இணையம் வழியாக
மேற்கொள்வதில் தொடர்ந்து ஏற்படும் பிரச்னைகளைச் சரி
செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள
வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான இடம், நேரம்
ஆகியவற்றைத் தெரியப்படுத்துவதற்கு தமிழக அரசு நிர்வாகத்துடன்
மத்திய அரசு போதுமான ஒருங்கிணைப்போடு செயல்பட வேண்டியது
அவசியம்.
மேலும் மக்களின் வரிப்பணத்தின் உதவியோடு தயாரிக்கப்பட்ட
கோவிஷீல்டு போன்ற தடுப்பூசிகளை தனியார் மருந்து நிறுவனம், மத்திய
அரசுக்கு ரூ.150/-க்கும், மாநில அரசுகளுக்கு அதைவிட இரண்டு மடங்கு
விலையில் ரூ.300/-க்கும் விற்பது துளியும் நியாயமில்லை. இதனை மத்திய
அரசும் வேடிக்கை பார்ப்பது சரியானதாகத் தெரியவில்லை. எனவே,
இதில் லாபம் பார்க்க நினைக்காமல் உற்பத்தி விலையிலேயே
அனைவருக்கும் தடுப்பூசியை வழங்குவதற்கு மருந்து நிறுவனங்களுக்கு
மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இதே போன்று “ரெம்டெசிவிர்’ தடுப்பூசி வாங்குவதற்காக மக்களை
தமிழக அரசு அலைக்கழிப்பது கண்டிக்கத்தக்கது. ஒரே இடத்தில் இந்த
மருந்து விற்பனையைச் செய்வதற்குப் பதிலாக தெளிவான
திட்டமிடுதலோடு மக்கள் சிரமப்படாத வகையில் கூடுதல் இடங்களில்
விற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியதும் அவசியமாகும்.
எல்லாவற்றையும் விட, கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க தடுப்பூசி
மட்டுமே தீர்வு என மத்திய, மாநில அரசுகள் கூறி வரும் நிலையில்
மக்களுக்கு வீடு தேடிச் சென்று தடுப்பூசியைச் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வது மட்டுமே பாதிப்பைக் குறைக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என Twitter-ல் அறிக்கை விடுத்துள்ளார் TTV தினகரன்