நெய்வேலி: நெய்வேலியில் நடிகர் விஜய் படப்பிடிப்பு நடத்தும் சுரங்கப் பகுதியில் போராட்டம் நடத்திய பாஜகவினருக்கு பதிலடியாக அங்கு குவிந்த விஜய் ரசிகர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது
நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு என்எல்சி 2ஆவது சுரங்கம் அமைந்துள்ள பகுதியில் கடந்த 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வரும் 10-ஆம் தேதி வரை இப்பகுதியில் படப்பிடிப்பு நடத்த உரிய அனுமதி வாங்கி படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் என்எல்சி சுரங்கத்தில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் வெள்ளியன்று மாலை சுரங்கத்தின் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினனர். பாதுகாக்கப்பட்ட பகுதியில் எப்படி படப்பிடிப்பை நடத்தலாம் என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு போலீசார் அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
இந்நிலையில் போராட்டம் நடத்திய பாஜகவினருக்கு பதிலடியாக அங்கு குவிந்த விஜய் ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டது
பாஜகவினர் போராட்டம் பற்றிய தகவல்கள் வெளியானதும் ஆங்காங்கே இருந்த விஜய் ரசிகர்கள் பாஜகவின் பாசிச போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்று கூடினர். இதன்காரணமாக அங்கே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதனிடையே படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த நடிகர் விஜய்யைக் கண்டதும் ரசிகர்கள் கூட்டம் உற்சாகமிகுதியில் கூச்சலிட்ட படி, கதவைச் சூழ்ந்ததால் அவரால் அங்கிருந்து வெளியேற முடியாத நிலை. பின்னர் அங்கிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ரசிகர்களை விரட்டி விஜய்யின் வாகனம் செல்ல வழிசெய்தனர்.
புதனன்று ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்த விஜய்யை வருமான வரித்துறையினர் சென்னைக்கு அழைத்து வந்து 23 மணிநேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர். தொடர் விசாரணை முடிவடைந்த நிலையில் நடிகர் விஜய் வெள்ளி முதல் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.