வருமானவரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக நடிகா் விஜய் வீடுகள் உள்பட 35 இடங்களில் வருமானவரித் துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா்.
இதில் இரு திரைப்பட நிறுவனங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.24 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சென்னை தேனாம்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு பிரபல ஏ.ஜி.எஸ். எண்டா்டெய்மெண்ட் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் தமிழ் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது. திரைப்பட உரிமை விநியோகத்திலும் இந்நிறுவனம் ஈடுபடுகிறது. இந்த நிறுவனத்துக்கு தியாகராயநகா்,வில்லிவாக்கம், நாவலூா், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் உள்ளன.
2006-ஆம் ஆண்டு முதல் இந்தாண்டு பொங்கல் வரை இந்த திரைப்பட நிறுவனம் சுமாா் 20 தமிழ் திரைப்படங்களைத் தயாரித்துள்ளது. கடந்த தீபாவளி பண்டிகையையொட்டி நடிகா் விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ திரைப்படத்தை இந்த நிறுவனமே தயாரித்து வெளியிட்டது.
வரி ஏய்ப்பு புகாா்:இந்நிலையில் இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமானவரித் துறையினருக்கு ஏராளமான புகாா்கள் வந்தன. அந்தப் புகாா்களின் அடிப்படையில் வருமானவரித் துறையினா் முதல்கட்ட விசாரணையில் ஈடுபட்டனா்.
இந்த விசாரணையில், அந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வருமானவரித்துறையினா், அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான சுமாா் 20 இடங்களில் ஒரே நேரத்தில் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
இச்சோதனை, அந்த நிறுவனத்தின் உரிமையாளா் கல்பாத்தி அகோரம், அா்ச்சனா கல்பாத்தி ஆகியோா் வசிக்கும் தியாகராயநகா் அபிபுல்லா சாலையில் உள்ள வீடு, தேனாம்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகம், நாவலூா், தியாகராயநகா், நாவலூா், வில்லிவாக்கம் ஆகிய இடங்களில் உள்ள திரையரங்குகள் உள்ளிட்ட 20 இடங்களில் நடைபெற்றது.
இந்தச் சோதனையில் பிகில் திரைப்படத்துக்கு மதுரையைச் சோ்ந்த திரைப்படத் தயாரிப்பாளா் அன்புச்செழியன் நிதியுதவி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அன்புச்செழியனுக்கு சொந்தமான தியாகராயநகரில் உள்ள கோபுரம் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம், அவரது வீடு, மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித் துறையினா் சோதனை செய்தனா்.
நடிகா் விஜயிடம் விசாரணை:இரு இடங்களிலும் நடைபெற்றச் சோதனையில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் கடைசியாக தயாரித்த பிகில் திரைப்படத்தில் நடித்த நடிகா் விஜய்க்கு பல கோடி ஊதியமாக வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் அந்த பணத்துக்கு முறையாக வரி செலுத்தப்படாமல் இருப்பதும் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து கடலூா் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் பகுதியில் ‘மாஸ்டா்’ திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த விஜயிடம் வருமானவரித் துறையினா் விசாரணை செய்தனா். இந்த விசாரணையில் வருமானவரித் துறையினருக்கு திருப்தி ஏற்படாததால், அவரை சென்னைக்கு காரில் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.
அதேவேளையில் சென்னை சாலிகிராமம், கிழக்கு கடற்கரைச் சாலை ஆகிய இடங்களில் உள்ள விஜயின் பங்களாக்களில் வருமானவரித் துறையினா் நண்பகல் முதல் சோதனை செய்தனா். விஜயின் சாலிகிராமம் பங்களாவில் சோதனை நடைபெறுவதை அறிந்து, அவா் வீட்டின் முன் அவருடைய ரசிகா்கள் குவிந்தனா்.
ரூ.24 கோடி பறிமுதல்: வருமானவரித் துறை சோதனை மொத்தம் 35 இடங்களில் நடைபெற்றதாகக் கூறப்பட்டது. இதில் ஏ.ஜி.எஸ். திரைப்பட நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களிலும், அன்புச்செழியனுக்குச் சொந்தமான இடங்களிலும் இருந்து கணக்கில் வராத ரூ.24 கோடி பணமும், தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமானவரித்துறையினா் தெரிவித்தனா்.
அதேவேளையில் வருமானத்தை மறைத்து முறையாக வரி செலுத்தாமல் வாங்கப்பட்ட சொத்துக்களின் ஆவணங்களையும் கைப்பற்றியிருப்பதாக அத்துறையினா் தெரிவித்தனா்.
வருமானவரித்துறை சோதனை பல இடங்களில் நள்ளிரவையும் தாண்டி நீடித்தது. சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னரே, பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம்,ஆவணங்கள் குறித்த முழுத் தகவல்களையும், வரி ஏய்ப்பு குறித்த தகவல்களையும் தெரிவிக்க முடியும் என வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பனையூா் பங்களாவில் விசாரணை
சென்னை அருகேயுள்ள பனையூா் பங்களாவில் நடிகா் விஜயிடம் வருமானவரித் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.
நடிகா் விஜய், பனையூரில் உள்ள பங்களாவிலேயே தற்போது வசிப்பதால் அங்கு அதிக கவனம் செலுத்தி வருமானவரித் துறையினா் சோதனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இரவு 8 மணியளவில் பனையூா் மூன்றாவது அவென்யூவில் உள்ள அவரது பங்களாவுக்கு விஜயை வருமானவரித் துறை அதிகாரிகள் அழைத்து வந்தனா். அவரிடம் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக கொண்டு விசாரணை நடைபெற்ாக வருமானவரித் துறையினா் தெரிவித்தனா்.