நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ளது. தேனி நாடாளுமன்ற தொகுதியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மகனை எதிர்த்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,வான தங்கத் தமிழ்ச்செல்வன் நிறுத்தப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சியுடன் மட்டும் கூட்டணி அமைத்து போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், 38 நாடாளுமன்ற தொகுதிகளில் களம் இறங்கியுள்ளது. சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. முதல்கட்டமாக 24 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடந்த வாரம் வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து இன்று 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார். 14 மக்களவை தொகுதிகள் மற்றும் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு டிடிவி தினகரன் வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
அதன்படி வடசென்னை மக்களவை தொகுதியில் வடசென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் சந்தானகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அரக்கோணம் தொகுதியில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் ஒருவரான என்.ஜி.பார்த்திபன் போட்டியிடுகிறார். வேலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.பாண்டுரங்கன் நிறுத்தப்பட்டுள்ளார். தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமமுக கொள்கை பரப்புச் செயலாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் ஒருவருமான தங்கத் தமிழ்ச் செல்வன் களம் இறங்கியுள்ளார். அத்தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை எதிர்த்து தங்கத் தமிழ்ச் செல்வன் போட்டியிடுகிறார்.
தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன், தருமபுரி மக்களவை தொகுதியின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி தொகுதியில் கணேசகுமாரும், திருவண்ணாமலை தொகுதியில் ஞானசேகரும், ஆரணி தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தமிழனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் கோமுகி மணியன், திண்டுக்கல்லில் ஜோதி முருகன், கடலூரில் கே.ஆர்.கார்த்திக், விருதுநகரில் பரமசிவ அய்யப்பன் என மக்களவை தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு டாக்டர் புவனேஸ்வரன் அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரியில் பொறியாளர் லெட்சுமணன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.
டிடிவி தினகரனின் ஆதரவாளராக இருந்து பின்னர் எம்.எல்.ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் தங்கத் தமிழ்ச் செல்வன், என்.ஜி.பார்த்திபன், பழனியப்பன் ஆகிய மூவரும் தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் களம் இறங்கியுள்ளனர்.