வண்ணங்களின் திருநாளாம் ஹோலிப் பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், வடமாநிலங்களில் நேற்றே கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கியது.
வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக இந்துக்களால் கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகையின் போது, பொதுமக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவியும், வண்ணம் கலந்த நீரை ஊற்றி மகிழ்வதும் வழக்கம். இதன்படி, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், ஹோலி பண்டிகையின் துவக்க நிகழ்வாக, சுத்தியலை கொண்டு செல்லும் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின் போது, ஒருவர் மீது ஒருவர், வண்ணங்களை வீசியப்படியும், மேளதாளங்கள் இசைக்கு ஏற்ப நடனமாடியும் மகிழ்ந்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த ஊர்வலத்தில் இடம்பெற்ற, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களும் பார்வையாளர்கள் கவனத்தை வெகுவாக கவர்ந்தது.
இதேபோன்று VRINDAVAN பகுதி கிருஷ்ணர் கோயில் முன்பாக நடைபெற்ற வழிபாடுகளில், பக்தர்கள் வண்ணப்பொடிகளை ஒருவருக்கொருவர் வீசி மகிழ்ந்தனர். பூதனை என்ற அரக்கியை, கிருஷ்ணர் அழித்ததை போற்றிடும் வகையில், இந்த கொண்டாட்டம் ஆண்டுதோறும் நடைபெறுவதாக, பக்தர்கள் தெரிவித்தனர். மத நல்லிணக்கத்தை போற்றும் வகையிலான இவ்விழாவில், சாதிமத பேதமின்றி ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை வீசி, கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரா (MADURA ) மாவட்டத்தில் உள்ள பங்கே பிகாரி கோயிலில். திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளையும், மலர்களையும் தூவி ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.