சென்னை: மக்களவை தேர்தலுக்கான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மற்றும் சின்னம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடக்கிறது. அன்றே இடைத்தேர்தலும் நடக்கிறது. எனவே, வரும் மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று அவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தஞ்சை தொகுதியில் தா.ம.கா சார்பில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவார் என ஜி.கே.வாசன் இன்று அறிவித்துள்ளார்.
சின்னம் ஒதுக்கீடு..அதுமட்டுமல்லாது தமாக கட்சிக்கான சின்னமும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி.கே.வாசன் அவர்கள் 2014ம் ஆண்டு தமாக கட்சியை தொடங்கிய போதிலிருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார். எனவே, தமாக கட்சிக்கு 1996ம் ஆண்டில் கிடைத்த சின்னமான சைக்கிள் சின்னம் கிடைத்துள்ளதால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் சைக்கிள் சின்னம் கேட்டு கிடைக்காததால் அவர் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.