பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாள்தோறும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசிடம் போலீஸார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் பயங்கரம் தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான கொடூரன் திருநாவுக்கரசுவை, பொள்ளாச்சியில் ஒரு ரகசிய இடத்தில் வைத்து, சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோரின் பெற்றொரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும், பொள்ளாச்சி விவகாரத்தில், 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்திருப்பதாகவும், அதுகுறித்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக தெரிவித்துள்ள நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி தமிழீழம், துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதிக்க கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், தமிழக மக்களின் மனநிலை எப்படி உள்ளதோ, அப்படித்தான் தனது மனநிலையும் உள்ளதாக, இசையமைப்பாளர் இளையராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
விரைந்து நடவடிக்கை கோரி, டெல்லி தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிட்டு அகில இந்திய மாதர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனி ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். இதனிடையே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரணை மேற்கொள்வதற்காக, புதிய பிரிவை தமிழக காவல்துறை உருவாக்கியுள்ளது. ஏடிஜிபி தலைமையில் 3 எஸ்பிக்கள் இந்த விசாரணைக் குழுவில் இடம்பெறுவார்கள், என அறிவிக்கப்பட்டுள்ளது