டிக்டோக் – இந்தப் பெயரை அறியாதவர்கள் கற்காலத்தில் வாழ்வதற்கு சமம் என்று பொருள். சீனாவில் தோன்றிய இந்த ஆப் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான, சர்ச்சைக்குரியதாகவும் திகழ்ந்து வருகிறது.
சமூக வீடியோ செயலியாக வலம்வரும் டிக்டோக்கில் பயனர்கள் தங்களது அங்க அசைவுகளுக்கு மியூசிக் வீடியோக்களை sync செய்து தங்களது நண்பர்களுடன் பகிரலாம். இதன் காரணமாக இன்று பல தரப்பினராலும் குறிப்பாக இளைஞர் வட்டாரத்தில் பலத்த வரவேற்பை டிக்டோக் பெற்றுவருகிறது.
ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் 1 பில்லியனுக்கும் அதிகமான (100 கோடி) தரவிறக்கங்களை டிக்டோக் பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான தரவுகளின்படி (Sensor Tower) ஃபேஸ்புக்கிற்கு டிக்டோக் கடும் போட்டியை ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது.
கடந்த ஆண்டு அறிமுகமான டிக்டோக் 2018ல் மட்டும் 663 மில்லியன் (சுமார் 63 கோடி) இன்ஸ்டால்களை பெற்றுள்ளது. அதே நேரத்தில் ஃபேஸ்புக் 711 மில்லியன் (71 கோடி) இன்ஸ்டால்களையும், இன்ஸ்டாகிராம் 444 மில்லியன் (44 கோடி) இன்ஸ்டால்களையும் பெற்றுள்ளது.
இந்த தரவுகள் அனைத்தும் சீனாவை தவிர்த்து வெளியாகியுள்ளது என்பதால் இந்த செயலியின் மொத்த தரவுகள் வெளியாகியுள்ள தகவல்களை விட மிக அதிகமாக இருக்கும்.
டிக்டோக்கின் மொத்த டவுண்லோடுகளில் 25% இந்தியாவில் நடந்துள்ளதாகவும், இந்த ஜனவரி முதல் கணக்கில் கொண்டால் டிக்டோக்கின் இந்த ஆண்டின் மொத்த டவுண்லோடுகளில் 43% இந்தியாவில் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் டிக்டோக்கின் இந்திய வளர்ச்சி எளிதாக புலப்படும்.
இதனிடையே, எந்த அளவிற்கு பிரபலம் ஏற்பட்டுள்ளதோ அதே அளவிற்கான எதிர்மறை விமர்சனங்களையும் டிக்டோக் சந்தித்து வருகிறது. இளைஞர் வட்டத்தினர் இதனை தவறான வழியில் பயன்படுத்தி வருவதாகவும், பாலியல் ரீதியிலான பிரச்சனைகளுக்கு டிக்டோக் ஆயுதமாக மாறிவருவதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
கலாச்சார சீர்கேட்டிற்கு துணை புரிவதால் இதனை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் டிக்டோக்கை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியிருப்பது கவனிக்கத்தக்கது.