asdasdasdadas
டெல்லி: பிரதமர் மோடி தனது ட்விட்டரில் காவலர் நரேந்திர மோடி என பெயரை மாற்றினார். நேற்று வெளியிட்ட பதிவில் நானும் மக்கள் அனைவரும் காவலாளிதான் என்ற வீடியோ டுவிட்டரில் நம்பர் ஒன் டிரண்டிங்காக இருந்தது. நாட்டிற்கு சேவை செய்ய உங்களின் காவலாளியாக நான் இருக்கிறேன். நான் தனி ஆளில்லை. ஊழல், அசுத்தம், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடும் ஒவ்வொருவரும் காவலாளி தான். இந்தியாவின் வளர்ச்சிக்காக கடினமாக உழைக்கும் ஒவ்வொருவரும் காவலாளி தான் என அந்த பதிவில் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து இன்று ட்விட்டரில் காவலர் நரேந்திர மோடி என பெயரை மாற்றினார்.
இதைத் தொடர்ந்து பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, பியூஷ் கோயல், ஜே.பி. நட்டா, ஹர்ஸவர்த்தன், தர்மேந்திர பிரதான் ஆகியோர் தங்கள் பெயர்களுக்கு முன்னால் சவுகிதார் என்ற பெயரைச் சேர்த்துள்ளனர். மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டரில் கூறுகையில்; நம்முடைய நாட்டின் காவலாளிகள், பணமில்லா பரிவர்த்தனையை மேற்கொண்டு, ஊழலில்லாத பொருளாதாரத்தை கொண்டுவர கடமைப்பட்டுள்ளோம். கடந்த ஆண்டுகளில் ஊழலும்,கறுப்புப்பணமும் நம்மை பாதித்துவிட்டது. இதை ஒழித்து எதிர்காலத்தை வளப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், ‘ நடைமுறை வாழ்க்கையிலும், ஒழுக்கத்திலும் யார் ஒருவர் கறைபடியாமல் இருக்கிறாரோ அவரே காவலாளி. அனைவரும் மனதளவில் காவலாளியாக இருப்போம் ‘ என தெரிவித்துள்ளார்.