மாலத்தீவு: 2 நாள் சுற்றுப்பயணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாலத்தீவு சென்றுள்ளார். இந்தச் சுற்றுப்பயணத்தின்போது, அந்நாட்டின் அதிபர், வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டோரைச் சந்திக்கும் சுஷ்மா சுவராஜ், இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அவர்களுடன் விவாதிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மாலத்தீவு சென்றுள்ள சுஷ்மா சுவராஜூக்கு விமான நிலையத்தில் மாலத்தீவு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலத்தீவு அதிபராக இப்ராகிம் முகமது சோலி கடந்த நவம்பர் மாதம் பதவியேற்றார். அதன் பிறகு, இந்தியா சார்பில் அந்நாட்டுக்கு மேற்கொள்ளப்படும் முதல் அரசுமுறைப் பயணம் இதுவாகும்.
இந்தப் பயணத்தின்போது, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா சாஹிப், பாதுகாப்பு அமைச்சர் மரியா அகமது தீதி, நிதியமைச்சர் இப்ராஹிம் அமீர், திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு அமைச்சர் முகமது அஸ்லாம், சாலை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஐசத் நகுலா, பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் பையஸ் இஸ்மாயில் உள்ளிட்டோரை சுஷ்மா சுவராஜ் சந்தித்துப் பேச உள்ளதாக கூறப்படுகிறது. முந்தைய அதிபர் அப்துல்லா யாமீன் ஆட்சியில் இருநாடுகளுக்கும் இடையே பலவீனம் அடைந்த நல்லுறவை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் அமையும் சுஷ்மா சுவராஜ் பயணம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.