தேவை இல்லாத குரூப்களிலும், உங்களுக்கு விருப்பம் இல்லாத குரூப்களிலும் சேருவதை தவிர்ப்பதற்காக புதிய வசதி ஒன்றை வாட்ஸ் அப் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
வாட்ஸ்அப்பில் உருவாக்கப்படும் குரூப் மூலமாக ஒரே நேரத்தில் ஒரு விஷயத்தையோ அல்லது தகவலையோ பலருடன் பகிர்ந்துகொள்ள முடிகிறது. அது மட்டும் அல்லாமல் பள்ளி, கல்லூரியில் ஒன்றாக படித்தவர்களுடன் உரையாட, குடும்பத்துக்குள் உரையாட, அலுவலக பணிகள் குறித்து பேச, பிக்னிக் குறித்து பிளான் செய்ய, வியாபாரம் செய்ய என பல காரணங்களுக்காக குரூப்களை நாம் பயன்படுத்தி வருகிறோம்.
இப்படி உபயோகமாக இருக்கும் குரூப்களில் யாருடைய அனுமதி இன்றி ஒருவரை குரூப்பில் சேர்த்துக் கொள்ள முடியும் என்பதால் அது பெரும்பாலானவர்களுக்கு தொந்தரவாகவும் அமைந்து விடுகிறது. இதனால் இதற்கு தீர்வு காண வேண்டும் என பல்வேறு பயன்பாட்டாளர்கள் வாட்ஸப் நிறுவனத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
தற்போது இந்த சிக்கலை தீர்க்க வாட்ஸப் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இதனால் தங்களின் அனுமதி இல்லாமல் ஒரு குரூப்பில் சேருவதை இனி தவிர்த்திட முடியும்.
உங்கள் வாட்ஸப் செயலியில் உள்ள செட்டிங்ஸை மாற்றி அமைப்பதன் மூலம் குரூப்பில் இணைப்பதற்கு யாரெல்லாம் அழைப்பை விடுக்க முடியும் என்பதைத் தேர்வு செய்துகொள்ளலாம். மேலும் உங்களுக்கு வரும் குரூப் ரெக்வஸ்டை ஏற்காவிட்டால் 72 மணி நேரங்களில் அந்த அழைப்பானது தானாகவே காலாவதியாகிவிடும்.
முதலில் இந்த வசதியை ஐஓஎஸ் இயங்குதளத்துக்கான வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. அதன் பின்னர் ஆண்ட்ராய்டு பதிப்புக்கும் இந்த வசதி தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.